Tuesday, December 30, 2008

சிறப்பு கருத்தரங்கு

ஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும்
ஹெச்.ஜி.ரசூல்

தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டக் கிளைன் 11 - 01 - 2009 ஞாயிறு நாகர்கோவில் அசிசி அரங்கில் ஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும் சிறப்பு ஆய்வரங்கை நடத்தியது.

தலித் சிந்தனையாளர் வி.சிவராமன்,கதையாளர் மீரான்மைதீன், ஆய்வாளர் கே.பிரசாத் நிகழ்வை நெறிப்படுத்த அண்ணாச்சி கண்ணன் துவக்கவுரை நிகழ்த்தினார்.

கேரளமாநில மொழியியற்புல ஈழத்து ஆய்வாளர் கலாநிதி அரங்கராசன் சங்க இலக்கியம் முதல் ஈழம் பொருளில் ஆய்வுரையை நிகழ்த்தினார். கி.பி.இரண்டாம் நூற்றாண்டு அகழ்வாராய்ச்சி,சங்க இலக்கியப் புலவர் ஈழத்து பூத்தன் தேவனார் சார்ந்து ஈழம் கருத்தாக்கத்தை அடையாளப் படுத்தினார்.

ஆறுமுக நாவலரின் சைவ மீட்டுருவாக்கத்திற்கு மாற்றமான கனகிபுராணம், கோட்டுப்புராணம், பனையை மையப் பொருளாக்கிப் பாடப் பட்ட தாலப் புராணம் குறித்தும் விரிவாக உரையாடினார்.

கவிஞர் ஆர்.பிரேம்குமார் இக் கட்டுரைமீது தனது கருத்துரையைத் தெரிவித்தார்.

முனைவர் செல்வகுமாரன் புலம்பெயர் கதையுலகம் பொருளில் சோபாசக்தி, சக்ரவர்த்தி, கலாமோகன் படைப்புகளில் வெளிப்படும் வாழ்வியல் யதார்த்தத்தை விவரித்தார்.

கவிஞர் ஜி.எஸ்.தயாளன் கவிதை எதிர்ப்பின் மொழி பொருளில் வ.அய்.ச.ஜயபாலன், சேரன், சோலைக்கிளி, அனாரின் கவிதைமொழி குறித்து உரையாடினார்.

கவிஞர் நட.சிவக்குமார் ஈழ இலக்கியத்தில் தலித்திய வெளி பொருளில் டேனியலின் பஞ்சமர், கானல், பஞ்சகோணங்கள் நாவல்களை முன்வைத்து உரையாற்றினார்.

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மீசான்கட்டைகளில் மீளஎழும் எழுத்துக்கள் பொருளில் அஸ்ரப் சிகாப்தீன், ஸதக்கா, நளீம், றஸ்மி, அலறி கவிதைகளினூடாக தமிழ் முஸ்லிம்கள், தமிழ் விடுதலை போராளிகள் உறவுகள்., முரண்கள் வெளிப்படுவதை முன்வைத்தார்.

விமர்சகர் அனந்தசுப்பிரமணியன் தற்கால ஈழத்து குறும்படங்களின் கலைநோக்கு குறித்து பேசினார்.

நிறைவுரை ஆற்றிய சுபாஷ் சந்திரபோஸ் தற்போதைய உடனடித் தேவை இலங்கையில் போர்நிறுத்தமே இந்திய தமிழ் அரசுகள் இனியும் காலம் தாழ்த்தாமல் லட்சக்கணக்கான தமிழ்மக்களை கொன்றுகுவிக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றார்.

கவிஞர் பூதை செ.கன்ணன் நிகழ்வு குறித்த விமர்சனங்களை முன்வைத்து நன்றி கூறினார்.




குமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும்பண்பாடும்

ஹெச்.ஜி.ரசூல்

தமிழ்நாடு இலக்கியப் பெருமன்ற குமரிக்கிளையும் நாகர்கோயில் திருச்சிலுவை மகளிர் கல்லூரி தமிழ்துறையும் இணைந்து 18- 12- 2008 அன்று குமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும் என்ற பொருளிலொரு சிறப்பு கருத்தரங்கை நடத்தியது.

கல்லூரி முதல்வர் அருட்சகோ.முனைவர் ரொசாலி முன்னிலை வகிக்க முனைவர் வ.ஜெயசீலி வரவேற்புரையை நிகழ்த்தினார்.

ஹெச்.ஜி.ரசூல் நிகழ்வை நெறிப்படுத்தி தலைமையுரை வழங்கும் போது கோட்பாடுகளின் வெளிச்சத்தில் வரலாற்றை மீளாய்வுச் செய்கையில் மகாராஜாக்கள்,ஆதிக்கச் சாதிகளுடன் மட்டுமே குமரியை நாஞ்சிலாக வடிவமைக்கும் கருத்தாக்கத்திற்கு மாற்றாக பன்மைத்தன்மை அடிப்படையில் அணுகவேன்டும் என்றார். சமணம், கத்தோலிக்க கிறிஸ்தவம், சீர்திருத்தக் கிறிஸ்தவம்,அடித்தளமுஸ்லிம்கள் தலித்கள் பழங்குடிகள் கலாச்சாரங்களின் வரலாற்றினோடுஅணுகும் முறையியலை முன்வைத்தார். வரலாற்றை மேலிருந்து எழுதுதலுக்கு மாற்றாக கீழிருந்து வாய்மொழிக்கதைகளினூடே உளவியல் பகுப்பாய்வு முறையை ஆலன்டான்டிஸ் சிந்தனைகளின் வழியாக அணுகவும் நுண்வரலாறுகள் குறித்த கவனிப்பையும் கூறினார்.

ஆய்வாளர் ஆர். பிரேம்குமார் கிறிஸ்தவ வரலாறும் அடித்தளமக்களெழுச்சியும் என்றபொருளில் உரையாற்றினார்.புனித தோமா, 16-ம் நூற்றாண்டின் புனித பிரான்சிஸ் சேவியர், 19-ம் நூற்றாண்டின் ரிங்கல் தெளெபே,மீட்பாதிரி பின்னணியில் தோள்சீலைப் போராட்டம், தீன்டாமை வரிக்கொடுமைக்கு எதிரான மக்கள் போராட்டங்களை விவரித்தார்.

ஆய்வாளர் அனந்தசுப்பிரமணியன் நமது பெருமிதங்களுக்குள் பூசி மெழுகப்பட்ட உயிப்பலிகளை ஞாபகப்படுத்தினார்.குமரி மண்ணின் சமணப் பின்னணியை எடுத்துக் கூறி ஜைனக் கோவில்கள் வைதீகக் கோவில்களாக மாற்றப்பட்ட வரலாற்றை எடுத்துரைத்தார்.

குறும்பட இயக்குனர் எஸ்.ஜே.சிவசங்கர் தலித் வரலாற்றோடு தொடர்புடைய வேதமாணிக்கத்தையும், அயோத்திதாசரின் தமிழ் பெளத்தத்தையும், குமரிப் பழங்குடிகளான காணிக்காரர்களின் வாழ்வியல் சடங்குலகத்தையும் விளக்கினார்.

ஆய்வாளர் சாகுல்ஹமீது அஞ்சுவன்னங்களின் வழியும், கேரள மாப்பிள்ளை முஸ்லிம்களின் பண்பாட்டு வரலாற்றையும் விளக்கிக் கூறினார். நெறியாளர் ரசூல் வரலாற்றிற்கும் படைப்பிலக்கியத்திற்குமான ரகசியத் தொடர்பையும் புனைவாக்கம் குறித்தும் குறிபுபுகளைக் கூறி நிறைவுரை ஆற்றினார்.

நிகழ்வுக்கு தமிழ் துறைத் தலைவர் ஜஸ்டின் பியூலா நன்றி கூறினார்.

No comments: