Tuesday, December 30, 2008

ஹெச்.ஜி.ரசூல் படைப்புகள்



குன்னிமுத்துகளின் தவிப்பு

அந்திச் சிவப்புச் சூடி
நாணப்பட்ட விரல்களுக்கு
உதடுகள் வருடித்தரும் முத்தம்
பல்லாங்குழி ஆட காத்திருக்கும்
குன்னிமுத்துகளின் தவிப்பு.
சுறுமா விழிகளும்
நெத்திச் சுட்டியும் எதிர் நின்று பேச
கூச்சமுற்ற இரவின் நீளம்
மணவறை பூந்திரைக்குள்
காற்றாகி நுழையும்

நெஞ்சின் தாள ஓசைகளில்
ஒன்றையொன்று நெருங்கி
உச்சிக் குளிர மோந்து
உயிரில் உயிர் கரையக் கரைய
கணந்தோறும் துளிர்க்கும்
ஒரு கொத்துக் கனவுகள்.

உயிரைப் பாதுகாத்து
எங்கோ ஒளித்து வைத்திருக்கும்
உடம்புக்கும் தெரியாது
மைலாஞ்சி பூக்களால்
மனசுக்குள் வரைந்த ஒவியம் பற்றி.
பற்ற வைத்த திரியின் வாசம் அறையெங்கும்
குறும்பு செய்து ஓடிமறையும்
பழக்கப்பட்ட சிறுமியின்
தலையாட்டலில் உதிர்ந்த பூக்கள்
ரைஹாலுக்கு அடியில்.



நட்சத்திரங்களை பொறுக்கிக் கொள்ளும் தவம்


இரவின் இருளில் மெய்மறந்து தூங்கவும்
விண்ணிலிருந்து விழுந்து கொண்டிருக்கும்
நட்சத்திரங்களை பொறுக்கிக் கொள்ளவும்
நாளெல்லாம் தவமிருந்தேன்
கனவுகலைந்தபோது
எனது இருப்பிடம் தகர்க்கப் பட்டிருந்தது.
விடாது பொழிந்து பார்க்கலாமென
மேகங்களில் வசித்திருந்தேன் மழையைப் போல.
கொண்டைமுறிந்த பனைமரங்களையும்
வருக்கை சக்கைகள் காய்க்கும் பிலாமரங்களையும்
வெட்ட வெட்ட பால்சுரக்கும் ரப்பர்மரங்களின்
உதிர்ந்த இலைகளையும் நனைத்தது தவிர
எந்த இதயங்களிலும் ஈரம் படரவில்லை.
துக்கத்தில் உறைந்திருந்த காலம் உறைய
மூடிய கைகளைத் திறந்து
பட்டாம்பூச்சிகளைப் பறத்திவிடுகிறேன்.
வனமெங்கும் பறந்து திரிந்துவிட்டு
உள்ளங்கைகளில் திரும்பவும்
அது உட்கார்ந்து கொள்கிறது.
எனதுலகம் உருமாறுகிறது
எல்லோரும் பெயர் சொல்லி அழைக்கும் போது
என்ன பெயர் சொல்லி உன்னை அழைக்க
தந்தைதாய் பெயரறியாத
அந்த பட்டாம்பூச்சிக்கு ஒரு பெயர் சூட்டினேன்.
எப்போதும்போல்
அது ஒரு குழந்தையாய் சிரிக்கிறது.



வந்து போகும் நீ


எந்தச் சாயலும் இல்லாமல்
வாழ் நினைத்தாலும்
எந்தச் சாயலாவது தெரிந்து விடுகிறது.
சாயலற்று வாழ்வதில்தான்
அர்த்தமென சொன்னாலும்
தவிக்கமுடியாததாகிவிட்டது
சாயலோடு வாழ்வது.
ஞாபகத்தை கிளறிவிட்டு
மெளனத்தில் உறைகிறாய்
முன்நின்று எதுவும் பேசாமல்
இயல்பாய் சிரித்து
பதிலுக்கு எதையேனும் செய்ய
தோன்றவில்லை இப்போது.
எனக்கென என்றோ ஒருநாள்
நீ செய்த இதயமொன்று.



உறைந்த தேவதைகள்

பல நூறு இறக்கைகளோடு
முகமெல்லாம் வியர்க்க
தூரங்களை பறந்து தாண்டிய
களைப்பெதுவுமின்றி
என் வாசல் முற்றத்தில் வந்திறங்கின தேவதைகள்
மிகுந்த அச்சத்தோடு
தாளிடப்பட்ட கதவுகளைத் தட்டின.
நரகத்தீயின் வெக்கைத் தாங்காமல்
படபடத்து கரிந்த சிறகுகளின்
அடையாளம் சிறிது தெரிந்தது.
முற்றுகையிடப்பட்ட கதவுகளின் பின்னால்
எந்த வரிகளிலும் நுழையமுடியாத
துயரங்களின் சுயசரிதைக் குறிப்புகள்
சிதறிக் கிடந்திருக்க கூடும்.
தன்னிருப்பை அழிக்கவிரும்பாது
பூட்டிய கதவின் முன்பு நின்ற
தேவதைகள் குழப்பமடைந்திருந்தன
இரவு மாறிச் சுழன்றோய
உறுமிக் கொண்டு திரும்பிய மேகத்தினுள்ளே
கிழிபட்ட தேவதைகள் சிந்திய ரத்தம்
உறைந்து கிடந்தது.


மரணச் சமாதியின் குருவி
ஹெச்.ஜி.ரசூல்

கிணற்றுநீரில் மிதந்த நிலவை
கைதூக்கிவிட யாருமில்லை.
இருளில் மூழ்கியது நிலவு.
வெளியேற்றப்பட்ட நட்சத்திரங்கள்
பொடிப் பொடியாய் பொடிந்து
அந்தரத்தில் நொறுங்கிக் கொண்டிருக்க
எல்லாதிசைகளிலும் உதிக்கும்
அபூர்வதருணத்தை எதிர்நோக்கி
மெளனமாய் காத்திருந்தது வானம்.
செடிகளில் பூத்த பிச்சிகள்தோறும்
உட்கார்ந்திருந்த பனித்துளிகளில்
கண்ணீர்துளியும்
அழுகைதுளியும்
ரத்தத் துளியும்
மாறி மாறி உருக்கொள்ள
துளிகளில் உருண்டோடும் காலம்.
கொம்புமுளைத்த ராட்சச பூதங்கள்
ஒவ்வொன்றாய் உருமாறி எழுகின்றன.
எங்கும் பிணக்காடு
வனங்களிலும்
பதுங்குக் குழிகளிலும்
வெடிச் சிதறல்களில் முகமிழந்த
கூடிழந்த சின்னஞ்சிறு புறாக்களின்
அம்மாக்களை காணவில்லை.
விடுதலையை மீட்கமுயன்று
தோற்றுப் போகாமல்
பிணமாகிப் போனவர்களின்
உயிர்த்தெழுதல் குறித்து யோசிக்கிறது
மரணச் சமாதியின் குருவி.

பெருந்துயரின் பேரலை

அன்புமயமாக
நீ எழுதிக் கொண்டிருந்த கவிதையை
பாதியிலேயே நிறுத்திவிட்டு
பறந்து போய்விட்டாய்
ஒரு பட்டாம்பூச்சியைப் போல.
வார்த்தை பேச்சு எழுத்து
எதிலும் அடக்கிச் சொல்லமுடியாத
பெருந்துயரம் பேரலையாய் எழுந்து
இதயத்தை முட்டித் தள்ளுகிறது.
ஆறுதல் கொள்வதற்கு
திரும்பவும் உன் பெயரை
உச்சரித்துக் கொள்கிறேன்
கண்மணிகளைக் காப்பாற்றிக் கொண்டிருந்த
இமையொன்று உதிர்ந்து வீழ்ந்தது.
கண்ணீர் சிந்த சக்தியற்று
சப்தநாடியும் உறைந்து போக
அழுதுபுரண்டெழும் ஞாபகம்
உன் முகமும் உன் மனசும்
உயிரைத் தாண்டிவந்து
என்னோடு பேசிக் கொண்டிருக்கிறது.


கதைகதையாய் சொல்லத் தெரிந்தவள்

கதைகதையாய் சொல்லத்
தெரிந்தவளிடம்
இப்படியானதொரு துயரம்
நிகழ்ந்ததில்லை.
அலைகளை ரசித்த குழந்தையின்
கண்களில்
ஒளிவற்றிப் போன இருட்டு.
கொண்டுவந்து சேர்த்த
குதூகலங்கள்
பொட்டித் தெறித்து
விம்முகின்றன.
ஓயாமல் வீசிக்
கொண்டிருக்கும் கடற்காற்றில்
இதயம் நொறுங்கிச் செத்த
வேதனையின் வேறொரு வாசனை.
இரவுகளில் கைப் பிடித்துச்
செல்லும்
கட்டுமரங்களின் சிதிலங்களில்
நேற்றைய கனவுகளின் மிச்சம்
தங்கியிருந்தது.
உயிர்களின் வரைபடமொன்று
மரணத்தின் சுவடுகளை
அழிக்கமுடியாமல்
தன்னையே மாய்த்துக்
கொள்கிறது.
கடற்புறத்தின் கண்ணீர்
மெளனங்களை
எழுதும் மொழி தெரியாமல்
நடுங்குகின்றன விரல்களின்
நுனி.
மனம் சொல்ல நினைப்பதை
வார்த்தை சொல்ல மறுக்கிறது.
ஆயுதங்களால் அழிக்கப்பட்டவை
அநேகம்.
குவிந்து கிடக்கும் சடலங்களை
கொத்தித் தின்னப் பறக்கும்
பருந்துகளுடன்
வெற்றிடம் எங்கும் விரிகிறது.
விடிந்தும் பொழுது இருள்
சூழ்ந்தே
விடிகிறது இப்போதெல்லாம்.



ஒரு மாயவானம்


அலையடித்துக் கொண்டிருக்கிறது
ஓய்ந்தபாடில்லை
கரும்பாறையாய் இறுகி உட்கார்ந்து
அலைகளை சிதறடிக்க விருப்பம்.
தெரியாத திசைகளிலிருந்தும் புறப்பட்டு
நெருங்கிமுத்தமிடும் காற்றில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது ஈரம்.
மேகம் தொட்டுரச எண்ணும்
வேளிமலைக் காற்றின் வருடல்
கடலும் காயலும் அலைபுரண்டு
விட்டு விலகி
வெற்றிடமாகும் பொழிக்கரை.
தோள் சுமக்கும் பல்லக்குகளை
வீசி எறிந்துவிட்டு
புறாக்களோடும் கிளிகளோடும்
பேசத் தொடரும் தேடல்
உடலை சுமக்கமுடியாமல்
நழுவி ஓடி விடுகிறது உயிர்
மழையாகவோ நதியாகவோ
அருவி மாலையாகவோ
பிரபஞ்சம் முழுதும் உருகி வழிய
ஒருமாயவனத்தின் வரிகளுக்குள் கடல்.


கரித்துண்டால் குறித்துவைத்த
தோற்றம் மறைவின் குறிப்புகள்

தோற்றம் மறைவுக் குறிப்புகளிலிருந்து
அலைபுரளும் எழுத்துக்கள்விடுபடா வரலாற்றின் சுவடுகளை
வரைந்து தீர்க்கின்றன.
ஆதித் தமிழனின்
உடல்மனம் சேர்ந்ததொரு கலவையில்
நூற்றாண்டுகள் தம்மைக் கரைத்து விட்டன.
ஆயுதம் தரித்த கடவுள்களாக
எங்கும் குழந்தைகள்
தொப்பூள்கொடி அறுபட்ட
பிறப்பில் ஒலித்த குரல்
அழுகையென கற்பிதம் செய்யப்பட்டது.
பிரபஞ்சத்தை
சின்னஞ்சிறு கண்களால்தரிசித்த
ஆனந்ததின் கூக்குரல் அது.
அதிகாரத்தைப் புறக்கணித்து
தனிமையைச் சூடிய பெருங்கனவொன்று
வவ்வாலாகி தலைகீழாய் தொங்குகிறது.
மரணத்திற்காகவே பிறப்பென்ற
குறுக்கப்பட்ட வாசகத்தை சுமந்து கொண்டு
எதிரே உட்கார்ந்திருந்தான் புத்தன்.
அவன் வீற்றிருந்த போதி மரத்தடி
பீரங்கியாய் உருமாறியிருந்தது.
அவன் விடும் மூச்சிலிருந்து
எறிகுண்டுகள்புறப்பட்டன.
யுத்தம்..மரணம்..கச்சாமி...

No comments: