குழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரம்
ந.நாகராஜன்
குழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரத்தில்
கண்களைக் காணவில்லை.
காதுகள் கொம்புகளாயின
தொங்கிய நாக்கில் வழிந்த சொட்டுகள்
எச்சிலா...ரத்தமா...எனத் தெரியவில்லை.
பற்களில் ஏதோ ஒட்டியிருந்தது.
முடிகள் முள்ளம்பன்றியின்
முட்கள் போலிருந்தன.
கன்னங்களில் தழும்புகள் போல் கோடுகள்.
தாடையில் உடைசல்
சிதைக்கப்பட்ட உடல் போல்
சிறு சிறு கோடுகள்
வாயருகே ஒரு கை சோற்றுருண்டையுடன்.
அது என்னுடையதல்ல
வரைந்த போதிருந்த குழந்தையின் முகத்தை
நான் பார்த்திருக்க நேர்ந்தால்
சித்திரத்தின் அர்த்தம் தெரிந்திருக்கக் கூடும்
இப்போது
சித்திரம் வரைந்த குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது

1 comment:
குழந்தைகள் வரைந்த கோட்டுச் சித்திரம் கவிதை குழந்தைகளைப் போலவே மனதில் ஒட்டிக் கொண்டது. குழந்தைகள் வரையும் சித்திரங்களில் நமது எண்ணற்ற முகங்கள். நமக்குத் தான் எத்தனை முகங்கள். கவிதை அழகான பதிவு.
comments by lazarjoesph, kulasekaram
Post a Comment